இயக்கச்சி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் மிகத்தொன்மை வாய்ந்த ஊராகும். யாழ்ப்பாணக்குடாநாட்டின் கிழக்கே ஆனையிறவு நீரேரிக்கு அண்மையாக உள்ள நிலப்பகுதியில் அமைந்துள்ளது.

அமைவிடம்

தொகு

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் அமைந்திருக்கும் புராதனமான பேரூர். இந்தப் பேரூரில் இயக்கச்சி, கோவில்வயல், முகாவில், மாசார், தருமக்கேணி என ஐந்து கிராம அலுவலர் பிரிவுகள் உண்டு. இயக்கச்சியின் கிராம அலுவர் பிரிவு எண் KN/79.

ஏ9 என்ற யாழ்ப்பாணம் - கண்டி வீதி இயக்கச்சியை ஊடறுத்துச் செல்கிறது. இந்த வீதியின் முக்கிய திருப்பம் அமைந்துள்ள இடமே இயக்கச்சிச் சந்தியாகும். இந்தச் சந்தியிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில் 16 கிலோ மீற்றர் தொலைவில் பிரசித்திபெற்ற சுண்டிக்குளம் கடற்கரை உள்ளது. இங்கே சுற்றுலாப்பயணிகளுக்கான Natural Park என்ற உல்லாச விடுதியும் வலசைப் பறவைகளி்ன் சரணாலயமும் உண்டு. வடக்கே வீரக்களி ஆறும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவும் வங்கக் கடலும் உள்ளன. தெற்கே ஆனையிறவு உப்பளமும் கடல் நீரேரியும் உள்ளன. மேற்கே பளை நகரம் உள்ளது.

வரலாறு

தொகு

இலங்கையின் தொல்குடியிருப்புகளில் ஒன்று இயக்கச்சி எனவும் இயக்கர் குலத்தினர் இங்கே வாழ்ந்திருப்பதாகவும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனாற்றான் இயக்கச்சி எனப் பெயர் விளங்கியதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மிகப் பிரசித்தி பெற்ற நீர்க்கிணறுகள் இங்கே உண்டு. தொன்மையான நீர்க்கிணறுகள் மரத்தினாலும் முருகைக்கற்களாலும் உருவாக்கப்பட்டவை. இப்பொழுதும் இங்கிருந்து அயற்பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இயக்கச்சி பொருளாதார ரீதியாகவும் படைத்துறை நிலையிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாக இருந்துள்ளது. ஒல்லாந்தரால் கட்டப்பட்ட pyl என்ற கற்கோட்டை இங்கே இருந்தது. இப்பொழுது சிதைவடைந்த கோட்டையின் எச்சங்கள் அந்தப் பகுதியில் மிஞ்சிக் காணப்படுகின்றன. இந்தக் கோட்டையிலிருந்து வடக்காக மூன்று கிலோ மீற்றர் தொலைவில் வெற்றிலைக்கேணி Basurta கோட்டையும் தெற்கே ஒரு கிலோ மீற்றர் தொலைவில் ஆனையிறவு Basculla கோட்டையும் உள்ளன. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்குமிடையிலான போரில் இந்தக் கோட்டைகள் 1991 மற்றும் 2000 ஆண்டுக் காலப்பகுதியில் முற்றாக அழிந்து விட்டன. இப்பொழுது வெற்றிலைக்கேணியில் வெளிச்ச வீடு மட்டும் மிஞ்சியுள்ளது.

விடுதலைப் புலிகளால் ஆனையிறவுத்தளம் முற்றுகையிடப்பட்டபோது இயக்கச்சியையே பிரதான தளமாகப் பயன்படுத்தப்பட்டது. இதனால் போரின் கூடுதலான அழிவுகளைச் சந்தித்த பிரதேசமாகியது.

ஆலயங்கள்

தொகு

மண்டலாய்ப்பிள்ளையார் கோயில், மல்வில் கிருஷ்ணன் கோயில், இயக்கச்சி கண்ணகை அம்மன்கோயில், சின்னமண்டலாய்ப் பிள்ளையார் கோயில், பறையன்குளம் பிள்ளையார் கோயில் என்பன இயக்கச்சியில் உள்ள தொன்மையான ஆலயங்களாகும். 400 ஆண்டுகளுக்கு முன் பெரிய வல்லியக்கன் கோயில் இயக்கச்சியில் இருந்ததாகவும் அது பின்னர் மல்வில் கிருஷ்ணன் கோயிலாக மருவியுள்ளதாகவும் வரலாற்றாசிரியர் பொ. இரகுபதி குறிப்பிட்டிருக்கிறார்.

கிழக்கே சுண்டிக்குளம் வீதியில் புல்லாவெளி அந்தோனியார் என்ற ஒல்லாந்தர் காலத்துத் தேவாலயம் உள்ளது. மிகப் பிரசித்து பெற்ற தேவாலயம் இதுவாகும்.

கலைகள்

தொகு

நாட்டுப்புறக்கலைகள் பாரம்பரியமாகவும் மரபு ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. மரபுரீதியான கூத்தாட்டமும் பாட்டும் ஆண்டுதோறும் ஆடப்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்கச்சி&oldid=3932607" இலிருந்து மீள்விக்கப்பட்டது